தமிழா.... தமிழா.....

By: ஜீனோ கார்த்திக் | 1/03/2009 02:56:00 AM | 2 Comment(s) »

சந்தோஷத்தின் உச்சம் எதுவோ அதையும் தாண்டி வளர்ந்திருக்கிறேன். நடந்தது கனவா நினைவா? தெரியவில்லை. வாழ்கையில் இரண்டாவது முறையாக மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்தேன். என் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்தவரை முதன்முறையாகச் சந்தித்தேன்.
எப்படி ஒரு பூனை ஒரு கடலைக் குடித்து விட முடியாதோ அது போலத் தான், அந்த மாமனிதரின் பெருமையின் ஒரு பாகத்தைக் கூட முழுமையாக என்னால் எடுத்துரைக்க இயலாது. இருப்பினும் என் பார்வையில் இருந்து அவரைப் பற்றிக் கூற முயற்சி செய்கிறேன்.
என் விடலைப் பருவத்தில் உலகை முதன்முறையாக(!) பார்த்த போது, இயற்கையை ரசிக்கக் கற்றுக்கொடுத்தவர், உலகை நேசிக்க கற்றுத்தந்தவர். தமிழை நேசிப்பவர். தமிழை நேசிக்க வைத்தவர். மண்ணுக்குள் புதைந்து வரும் மனிதத்தை அப்படியே விட்டு விடாமல், தன் கவிதைகளில் ஏற்றி மனித மனங்களில் விதைத்தவர். தேசப்பற்றை ரத்ததிலே பாயச்செய்தவர்.


’சிலரின்’ காதலைப்(?) பார்த்து “..சீ, இதுவா காதல்”, என்று நொந்த போது, ”காதல் எதுவென்று” விளங்கச் செய்தவர். நட்பின் ஆழம் வரை கூட்டிச் சென்றவர்.

நான் கண்ணீர் சிந்தும் போது கைக்குட்டை ஆனவர். சோகத்தின் போது மருந்தானவர். சந்தோஷத்தை இரட்டிப்பு ஆக்குபவர். சின்னச் சின்ன தோல்விகளைச் சந்தித்த போது தோள் கொடுத்துத் தூக்கி விட்டவர். அன்றாட வேலைகளில் மூழ்கி என் முகவரியைத் தொலைத்திருந்த வேளையிலே, என்னை எனக்கு அடையாளம் காட்டியவர். நாட்டின் கடைநிலை மாந்தரின் வாழ்க்கைக் கூட காவியமாக்கியவர். வாழ்க்கையை முன்னோக்கியும் கொஞ்சம் பின்னோக்கியும் பார்க்கக் கற்றுத் தந்தவர். அவரின் பேனாவால் என்னைச் செதுக்கிக் கொண்டிருப்பவர். அத்தனை தமிழ் இதயங்களுக்கும் துடிப்பாய் இருப்பவர். இந்த ஒற்றை மனிதனுள் எத்தனை எத்தனை சிந்தனைகள் தான் இருக்கின்றதோ என்று எண்ணி எண்ணி வியக்காத நாளில்லை.
உங்களுக்கும் அவரைத் தெரியும். அவர்தான், கவிப்பேரரசு வைரமுத்து.

நேற்று (02-ஜனவரி-2009), கலைஞரின் “என் தம்பி வைரமுத்து” புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது தான் அந்த கருப்பு வைரத்தின் தரிசனம் கிடைத்தது. அவரின் பேச்சால் என்னை சிலிர்க்கச் செய்தார். விழா முடிந்த பின் எனது பிரதியில் கவிப்பேரரசுவிடம் கையொப்பம் வாங்கிக்கொண்டேன். வாழ்க்கையின் உன்னத நிகழ்வுகளில் ஒன்றாக கருதுகிறேன். கைகுலுக்கினேன். மகிழ்ச்சியின் உச்சத்தின் இருந்ததால் பேச்சு வரவில்லை.

விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பேசிய உரையை இங்கு பதிவேற்றம் செய்துள்ளேன்.


என் சந்தோசத்தை உங்களோடு பரிமாறிக்கொள்ளவே இந்த வலைப்பூவில் பதிவு செய்துள்ளேன்.


நன்றி: நண்பர் “ஸ்ரீ...” அவர்களின் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. அவரின் வலைப்பூவில் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

2 Comment(s)

 1. Anonymous // 1/03/2009 09:43:00 AM  

  கலக்கிட்டெ பாபு,

  உன்னுடய மகிழ்ச்சி நீ எழுதிய எழுத்தில்

  மகிழ்ச்சி தொடர வாழ்த்துகள்

 2. ஜீனோ கார்த்திக் // 1/03/2009 11:37:00 AM  

  /// பாம்பாட்டி சித்தன் கூறியது...

  கலக்கிட்டெ பாபு,

  உன்னுடய மகிழ்ச்சி நீ எழுதிய எழுத்தில்

  மகிழ்ச்சி தொடர வாழ்த்துகள்//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா. சந்தோசத்தைப் பகிரும் போது தான் கூடுகிறது.

CO.CC:Free Domain